' தாமரை புரையும் காமர் சேஅடிப்
பவளத்து அன்ன மேனித் திகழ் ஒளிக்
குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின்
நெஞ்சு பக எறிந்த அம் சுடர் நெடு வேல்
சேவல் அம் கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே. '
- குறுந்தொகையில் கடவுள் வாழ்த்தாக வரும் இப்பாடலைப் பாடியவர் 'பாரதம் பாடிய பெருந்தேவனார்' ஆவார். இப்பாடலில் முருகனுடைய பெருமைகள் கூறப்பட்டுள்ளன. இப்பாடலின் பொருள் விளக்கம் வருமாறு:
'தாமரை மலர் போன்ற அழகிய பாதத்தையும், பவளம் போன்ற மேனியையும், குன்றிமணியைப் போல ஒளி திகழும் உடையையும், குன்றின் மார்பில் எறிந்து பிளந்த அழகிய நெடிய சுடர் வேலையும், சேவல் கொடியையும் உடையவன் காப்பதால் இவ் உலகம் நாளும் நன்மை பெறுகின்றது.'
இனி இப்பாடலில் வரும் நயங்களைக் காணலாம். புலவர், இப்பாடலில் வரும் தெய்வத்தின் பெயரை வெளிப்படையாகச் சொல்லாமல், 'முருகன்' என்று குறிப்பால் உணரும் வண்ணம் கூறியுள்ளார். முருகன் சிவந்த நிறம் உடையவன். அவனது பாதம், உடல், உடை, ஆயுதம், கொடி ஆகிய அனைத்தும் சிவந்த நிறத்தவையே. ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சிவப்பு நிறம் கொண்டவை என்று புலவர் கூறுகின்றார்.
முருகனது பாதமோ செந்தாமரை மலர் போன்ற சிவப்புடையது. அவனது மேனி வண்ணமோ செம்பவளம் போன்ற சிவப்புடையது. அவன் உடுத்தும் ஆடையோ செங்குன்றி மணி போன்ற காவி நிறம் உடையது. அவன் கையில் தாங்கியிருக்கும் வேலோ, கிரவுஞ்ச மலையைப் பிளந்ததால் உண்டான குருதிச் சிவப்பு வண்ணம் உடையது. அவனது கையில் உள்ள கொடியோ சிவப்பு நிறச் சேவலைத் தாங்கியுள்ளது. இவ்வாறு ஒவ்வொன்றும் ஒரு விதமான சிவபபு நிறத்தைப் பெற்றுச் சிறந்து விளங்குகின்றன என்று புலவர் விளக்கமாகப் பாடுகின்றார்.
முருகன் குறிஞ்சிக் கடவுள். சிவந்த மேனி கொண்ட மலைக்குற மக்களின் தலைவனான முருகனது மேனி செம்பவள நிறம் கொண்டது என்று புலவர் கூறியதில் தப்பில்லை. ஆனால், அவனது பாதத்தை மட்டும் ஏன் செந்தாமரைச் சிவப்பானது என்று கூற வேண்டும்?. ஏனென்றால் முருகன் குழந்தை அல்லவா அதாவது சேய் அல்லவா? குழந்தையின் பாதம் தாமரைச் சிவப்பாகத் தானே இருக்கும். பாதம் தாமரைச் சிவப்பானது என்று கூறியுள்ளதன் மூலம், முருகனது இளமையை அதாவது குழந்தைத் தன்மையை நிலைநாட்டுகின்றார் புலவர்.
அடுத்து முருகனின் ஆடை காவி நிறத்தில் ஏன் இருக்கிறது?. ஏனென்றால் வானவில்லின் ஏழு வண்ணங்களில் காவி (ஒருவித சிவப்பு) நிறமே முதலாவதும், மிக அதிக அலைநீளம் கொண்டதும் ஆகும். அதிகமான அலைநீளம் கொண்டுள்ளதால், வெளியில் இருக்கும் வெப்பத்தை தனக்குள் செல்லாது தடுத்து நிறுத்தும் ஆற்றல் இந்த நிறத்துக்கு உண்டு. எனவே தான் குழந்தையாகிய முருகனுக்குப் பாதுகாப்பு கருதி காவி உடை அணிவித்தார் புலவர்.
முருகன் கையில் உள்ள வேலின் நிறம் குருதிச் சிவப்பாக இருக்கிறது என்று புலவர் பாடியுள்ளதில் இருந்து, அவன் குழந்தையாய் இருந்தாலும், வீரம் மிக்கவன், எதிரிகளை அழிக்கும் பேராற்றல் கொண்டவன் என்று நமக்கு உணர்த்துகின்றார். இதனை உலகோர்க்குக் கூவிச் சொல்லும் வண்ணமாகவே சேவல்கொடியை கையில் கொண்டுள்ளான் முருகன் என்றும் கூறுகின்றார். இப்படி முருகனைப் பற்றிய பல செய்திகளை இந்தப் பாடலில் மறைமுகமாக நமக்கு உணர்த்தியுள்ளார்.
----------------------------------------வாழ்க தமிழ்-----------------------------------------